PERITHINUM PERITHU KEL BY PRIYASAGI
சக வயதினரோடு கூடி பழகுதல், குழுவாக இணைந்து ஓடி ஆடி விளையாடுதல், வகுப்பறையில் ஒன்று சேர்ந்து கற்றல் போன்ற இனிமையான அனுபவங்களை ஒருசேர தர வல்லது பள்ளிக்கூடம். ஆனால், பெருந்தொற்றினால் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதினால் துளிர்களுக்கு இதில் சொல்லப்பட்ட ‘கூடி’, ‘இணைந்து’, ‘சேர்ந்து’ போன்ற சொற்கள் அந்நியமாகிப் போயிற்று. இதன் பின்விளைவு என்னவென்பது, இரண்டாண்டுக்காலம் மூடப்பட்டிருந்த பள்ளிக்கூட கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டபோது அனைவருக்கும் உறைக்கத் தொடங்கியது.
சிறாரிடம் பல்வேறு நடத்தை சிக்கல்கள் ஆங்காங்கே தென்பட்டது. சிலர் கற்றலில் சறுக்கினர், சிலர் தன்னம்பிக்கை இழந்து தடுமாறினர், சிலரோ ஆசிரியர்களிடமே தகாத முறையில் நடந்து கொண்டனர், சிலர் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் அபாயத்திலிருந்தனர்…இப்படி பல. வயதில் பெரியவர்கள் பலரின் இயல்பு வாழ்க்கையை பெருந்தொற்று காலம் இடைமறித்தது என்றால் மாணவர்களின் வாழ்க்கையை அது தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது.
இந்நிலையில், மாணவர்களிடம் நற்சிந்தைகளை, நற்பண்புகளை, நன்னெறிகளை ஊட்ட வேண்டியது ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பள்ளி நாளிதழான ‘வெற்றிக்கொடி’யின் தலையாயக் கடமை என்றுணர்ந்தோம். அதேவேளையில் போதனையாக அல்லாமல் ரசிக்கும்படியாக நற்சிந்தனைகள் கடத்தப்பட வேண்டும் என முடிவெடுத்தோம். காலா காலத்துக்கும் நிலைத்து நிற்கும் அறநெறிகள் இருப்பினும் அவற்றை எடுத்துரைக்கும் விதம் காலாவதியானதாக இருப்பின் பயனில்லை. அதுமட்டுமின்றி தற்காலத்தில் மாணவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு வழிகாட்டும் வகையிலும் எழுதப்பட வேண்டும் என்கிற சவாலையும் சமாளிக்க வேண்டி இருந்தது. இவை அத்தனைக்கும் செறிவான வடிவம் கொடுத்து, ‘பெரிதினும் பெரிது கேள்’ தொடரை ‘வெற்றிக்கொடி’ பள்ளி நாளிதழில் சிறார் எழுத்தாளரும் பள்ளி ஆசிரியருமான பிரியசகி எழுதியது பாராட்டுக்குரியது.
Reviews
There are no reviews yet.